மழை - இபிஎஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருங்கள்”- கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு EPS கோரிக்கை!

PT WEB

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலியில் மழை

தொடரும் அதிகனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நீர் வெளியேறுவதால் பல குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென செய்தி வெளியிட்டுள்ளார்.

மக்கள் பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்! - இபிஎஸ்

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கழகத் தொண்டர்கள் களத்தில் நின்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தங்கள் சுய பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டு கழகத்தின் சார்பில் உரிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.