தமிழ்நாடு

”2019 ல் நீட் விலக்கு மசோதா ஏன் நிறைவேறவில்லை?”-பேரவையில் இபிஎஸ் -சி.விஜயபாஸ்கர் விளக்கம்

”2019 ல் நீட் விலக்கு மசோதா ஏன் நிறைவேறவில்லை?”-பேரவையில் இபிஎஸ் -சி.விஜயபாஸ்கர் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, `அதிமுக நீட் விலக்குக்கு நடவடிக்கை எடுக்கவில்லையென வெளியில் பலர் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் “நீட் தேர்வை அமலுக்கு கொண்டுவந்தது காங்கிரஸ்தான்” என சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயாபஸ்கர் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் `நுழைவுத்தேர்வு என்ற வழிமுறை ரத்து செய்யப்பட்டதே அதிமுக ஆட்சியில்தான்’ என்றும் குறிப்பிட்ட சி.விஜயபாஸ்கர், அதே நிலைப்பாட்டில் இப்போதும் இருப்பதாகவும், அதனடிப்படையில் தாங்கள் (அதிமுக) நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய துணைபுரிவோம் என்றும் குறிப்பிட்டார். இக்கருத்துகளை சி.விஜயபாஸ்கர் குறிப்பிடுகையில், அவருக்கும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் க.பொன்முடி ஆகியோருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அமைச்சர்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சி.விஜயபாஸ்கருக்கு கேள்வியொன்றை முன்வைத்தார்.

அதுகுறித்த முழுமையான விவரங்களை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்: ”நுழைவுத் தேர்வை கொண்டுவந்தது யார்?” “நீட்-ஐ கொண்டுவந்தது யார்?”- பேரவையில் காரசார விவாதம்

அப்படியான சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசத்தொடங்கினார். அப்போது அவர் “திமுக ஆட்சியில்தான் நீட் விலக்கு மசோதா வந்தது என்ற அவதூறை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். நீட் நடைமுறை முதன்முதலாக எப்பொழுது அமலுக்கு வந்தது என்பதை யாராலும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது” என்றார். இதற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை குறிக்கிட்டு பேசினார். இதனால் பேரவையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அப்பாவுவும், அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகனும், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை அமைதி காக்க சொல்லி “எதிர்க்கட்சி தலைவர் பேசுகையில், அவர் பேச அனுமதியுங்கள். அவர் பேசி முடிக்கட்டும்” எனக்கூறிப்பிட்டனர்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, “இன்று நாம் கூடியிருப்பது, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, அதை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். நீட் தேர்வை கொண்டு வந்தது யாரென்ற விவாதத்துக்காக இன்று நாம் கூடவில்லை. ஆகவே இன்றைய தேவையை உணர்ந்து, அதுபற்றி மட்டும் நாம் இங்கு பேசினால் போதும்” என்று கூறினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “நாங்கள் வேறெந்த நோக்கத்துக்காகவும் நீட் நடைமுறையை யார் முதன்முதலில் கொண்டுவந்தது என்று பேசவில்லை. நீட் விலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. எங்களைப் பற்றி வெளியில் சென்று அவதூறு பரப்புகின்றனர் என்பது மட்டுமே எங்களின் பிரச்னை. அதை சரிசெய்யவே, தற்போது பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அமருமாறு அறிவுறுத்திவிட்டு, பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேச வாய்ப்பளித்தார். அவை முன்னவர் துரைமுருகனும், சி.விஜயபாஸ்கரை விரைவாக பேசி முடிக்க அறிவுறுத்தினார்.

அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர், “முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில் ஜூலை 2019 நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா என்ன ஆனது என்று கேட்டார். அது நிறுத்திவைக்கப்பட்டது என்ற கருத்தை அப்போதே நான் பதியவைத்திருந்தேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குடியரசு தலைவர் ஏன் அதை திருப்பி அனுப்பினார் என்றும் அப்போதே அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

தொடர்ந்து, “இந்த அரசு நீட் விஷயத்தில் மேற்கொண்டிருக்கும் அனைத்து சட்ட விஷயங்களுக்கும், அதிமுக துணை நிற்கும். இன்னும் கூடுதலாக சட்டவல்லுநர்களை கொண்டு, மிக கவனமாகவும் நுணுக்கமாகவும் இவ்விஷயத்தை அனுக வேண்டும் என்பதே எங்களின் பரிந்துரை. ஏனெனில் கடந்த முறை நாம் 3 அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று, இறுதியில் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் கிடைக்காமல் தவித்தோம். ஆகவே இம்முறை நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நீட் விலக்கு விஷயத்தில், அதையே இந்த அரசுக்கும் நான் பரிந்துரைக்கிறேன். எம்.ஜி.ஆர்.-ன் கூற்றப்படி `பிரிவிணை நாடோம், சமநிலையில் இணைவோம்’ என்றே நாங்கள் இருப்போம். காவிரி பிரச்னையை போலவே இவ்விஷயத்தில் மாணவர் உரிமைக்காகவும் அதிமுக, மத்தியில் ஆளும் அரசுடன் செயல்படும்.

கடந்த முறை இறுதிவரை சென்று நாம் தவறவிட்டோம். அதன்பின்னணியில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இருந்தது. அந்த தீர்ப்புக்கு வழிவகுத்தது, காங்கிரஸ் என்பதையும் நினைவூகூர்கிறேன். பெயர் சொல்லவோ, அரசியல் செய்யவோ நான் விரும்பவில்லை. நிதர்சனம் இதுதான் - இதை எதிர்த்துதான் நாம் செயல்பட வேண்டியுள்ளது என, இந்த அரசுக்கு எடுத்துக்கூற மட்டுமே நான் விழைகிறேன். நடைமுறையில் எங்கெல்லாம் சிக்கல் வரலாம் என தெரிந்துவைத்தால்தான், அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்றும் திட்டமிடமுடியும்” என்றார்.

இதை வழிமொழிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “நடைமுறை சிக்கல் இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் இந்த மசோதா திருப்பி அனுப்பப்படுகிறது. அனைத்தையும் அனைவரும் இணைந்து, அரசியல் நோக்கமின்றி செயல்பட்டு, போலி பரப்புரைகளை மேற்கொள்ளாமல் இருந்து, சரிசெய்வோம்” எனக்கூறி அமர்ந்தார்.