ஈபிஎஸ் பொதுச்செயலாளர் PT
தமிழ்நாடு

EPS-ன் பொதுச் செயலாளர் பதவிக்கு சிக்கலா?.. நடந்தது என்ன?

``எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்?'' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

“திர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்?'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்திருப்பது, அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, அதிமுகவின் இரட்டைத் தலைமை பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லையா? என்கிற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம்.

EPS and OPS

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட நால்வரை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வழக்கு விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குத் தொடுக்கப்பட்டபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்ஸும் இருந்தனர். இந்தநிலையில், "எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் முதலில் அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது தவறாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, இதை மாற்றி புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்’’ என்று தெரிவித்தார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் என அவர் தரப்பில் நேற்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

உடனடியாக, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், “நீதிமன்றம் இன்னும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்கவில்லை. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்தான். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பதவியையும் ராஜினாமா செய்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஆனுப்பியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால், அவர் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. தனக்குத்தானே பொதுச் செயலாளர்னு அலங்காரம் செய்துகொண்டாலும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அதுதான் உண்மை’’ என ஆர்ப்பரித்தனர்.

ஆனால், “பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ தி மு க பொதுச்செயலாளர் என்பதை உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை உறுதி செய்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கைத் தாக்கல் செய்த போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஓபிஎஸ்., இன்பதுரை

ஆனால், தற்போது அவர், அ தி மு க பொதுச்செயலாளராக தொடர்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமி இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்வது சரியாக இருக்காது. அதனால்தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பதில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது நாங்கள் இந்த விளக்கத்தைக் கொடுத்தோம். அப்படியானால் இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் இணை ஒருங்கிணைப்பாளர் என்றிருப்பதை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யும்படி திருத்த மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்” என்கிறார் அதிமுகவின் வழக்கறிஞரணி இணைச் செயலாளர் இன்பதுரை.