நேற்றைக்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் உண்மையான காரணங்களை கூறினாலும் இபாஸ் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இபாஸ் பெறும் முறையில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் புகார் எழுந்தது.
மேலும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும், வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் முறை தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி நேற்று முதல் விண்ணப்பித்த உடனே இ பாஸ் கிடைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
நேற்றைக்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று இபாஸ் முறையில் தளர்வு என்பதை அறியாமல், ரத்து என நினைத்து ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கும் படையெடுக்க தொடங்கினர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி இ பாஸ் இருப்பவர்களை மட்டும் அனுமதித்தது. இபாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.