தமிழ்நாடு

ரயிலில் முகிலன் பயணிக்கவில்லை - காவல்துறை

ரயிலில் முகிலன் பயணிக்கவில்லை - காவல்துறை

webteam

சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். 

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், 5 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. விசாரணையின் போது தங்கள் தரப்பு தகவலை கூறிய எழும்பூர் ரயில்வே காவல்துறை முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை என்று தெரிவித்தனர். 

இது குறித்து நீதிபதியிடம் தகவல் தெரிவித்த ஒலக்கூர் எஸ்.ஐ., கூடுவாஞ்சேரியிலேயே முகிலனின் செல்போன் இணைப்பு துண்டிப்பட்டுள்ளது என்றும், முகிலன் போனதாக கூறப்படும் ரயில் ஒலக்கூரில் நிற்காது என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் எழும்பூர் ரயில்வே போலீஸ், எழும்பூர் காவல் நிலையம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராக இணைத்துள்ள நீதிமன்றம், எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் வந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை எழும்பூர் காவல்துறையினரிடம் தாக்கல் செய்ய இரயில்வே போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் முகிலன் காணாமல்போன வழக்கில் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது