தமிழ்நாடு

காவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை

webteam

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி அவதூறு கருத்துக்களை பரப்பியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை பதிவு செய்யவும், சாலை விழிப்புணர்வு மற்றும் மோசடி கும்பல்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட காவல்துறை சார்பில் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டது. இந்தப் பக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே காவல்துறை குறித்தும், காவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில மர்ம நபர்கள் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையைச் சேர்ந்த கணினி வல்லுனர்கள் ஃபேஸ்புக் பக்கத்தை மீட்டெடுத்தனர். அதனை ஆராய்ந்தபோது, அந்த பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முகநூல் பக்கத்தை முடக்கியவர்கள் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங் மற்றும் மார்சியன் ஆண்டணி என்ற நான்கு பேர் என கண்டுபிடிக்கப்பட்டது. 

நான்கு பேரும் டிப்ளமோ பொறியியல் படித்து விட்டு வெளிநாடுகளில் பணியாற்றுவதும், அங்கிருந்து இந்த செயலை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து குவைத்திலிருந்து நாடு திரும்பிய பொறியாளர் ஜெரூன் என்பவரை தக்கலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை கண்டித்து நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.