தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பணத்திற்காக கடத்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முகமது மும்தசீர் (20). மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவரது தந்தை துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் இருந்த மும்தசீர், நேற்று திருவிடைமருதூரில் உள்ள தமது நண்பர் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இதனிடையே நேற்றிரவு 8.15 மணி அளவில் மும்தசீர் போனிலிருந்து மும்தாஜ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசீரை கடத்தி கோயம்புத்தூர் அழைத்துச் செல்வதாகவும் 5 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த தாய் மும்தாஜ் பேகம் மற்றும் அவரது உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசீர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது.
இதனிடையே உறவினர்களும் சுற்றுவட்டார பகுதியில் மும்தசீரை தேடி வந்தனர். இந்நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்று கரையோரம் உள்ள முட்புதரில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் மும்தசீரின் உடல் கண்டறியப்பட்டது. அருகில் மும்தசீர் கொண்டு சென்ற ஸ்கூட்டி வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மும்தசீரை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்பட்டார்? காதல் விவகாரம் காரணமா என்பது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக திருவிடைமருதூர் சரகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.