தமிழ்நாடு

தூக்கில் தொங்கிய நிலையில் இஞ்ஜினியர் மாணவர் உடல் மீட்பு - போலீஸ் வருவதற்குள் நடந்தது என்ன?

தூக்கில் தொங்கிய நிலையில் இஞ்ஜினியர் மாணவர் உடல் மீட்பு - போலீஸ் வருவதற்குள் நடந்தது என்ன?

webteam

ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவரது மகன் சதீஷ் கல்லூரி விடுதியில் தங்கி எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், பாலப்பாளையம் பகுதியில் சதீஸ் மற்றும் சக மாணவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் புகாரை அடுத்து புதுச்சத்திரம் காவல்துறையினர், கல்லூரி மாணவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது கஞ்சாவை எங்கே வாங்கினீர்கள் என காவல்துறையினர், மாணவர்களை பிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் கல்லூரி மாணவர்களை தீபாவளி பண்டிகைகக்கு கூட சொந்த ஊருக்கு செல்ல கூடாது என மிரட்டிதாகவும் சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவர் சதீஷ், சொந்த ஊரான தேனிக்கு செல்லாமல் இரவு கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்ததாக தெரிகிறது. அப்போது விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் இரவு உணவு அருந்திவிட்டு அனைவரும் அறையில் உறங்கச் சென்றுள்ளனர்.

விடுதி பாதுகாவலர் ஆய்வு பணியில் இருந்தபோது மாணவர் சதீஷ் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி பாதுகாவலர் உடனடியாக புதுச்சத்திரம் காவல் துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த புதுச்சத்திரம் காவல் துறையினர், மாணவர் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினருக்கு பயந்து கல்லூரி விடுதியிலேயே மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பே, சக மாணவர்களை வைத்து கல்லூரி நிர்வாகம் உயிரிழந்த மாணவர் சதீஷின் உடலை தூக்கிச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.