பெரம்பலூர் அருகே பொறியியல் படித்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தே சொந்த முயற்சியில் இன்குபேட்டர் செய்து கோழிக்குஞ்சுகளை பொறிக்க வைத்து அசத்தியுள்ளார்.
பெரம்பலூர் அருகே சீராநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் உலகநாதன். கொரோனா ஊரடங்கு காலம் பலருக்கும் புது புதுசிந்தனையை தந்தது போல் இவருக்கும் தந்துள்ளது. அதன்படி மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ள உலகநாதன் சுயமாக கோழிக்குஞ்சு பொறிக்கும் இன்குபேட்டரை செய்வது என முடிவெடுத்தார்.
கூலிங் ஃபேன், தெர்மாகோல், பல்ப் மற்றும் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தெர்மோ ஷாட்டர் ஆகியவற்றை கொன்டு இன்குபேட்டரை தயார் செய்துள்ளார் உலகநாதன். இதற்கான செலவு 600 ரூபாய் மட்டுமே ஆனதாக கூறும் இவர், சந்தையில் இந்த இன்குபேட்டரை வாங்கினால் குறைந்தது 2000 ரூபாய் ஆகும் என்கிறார்.
இதன் மூலம் முதன்முறையாக 10 குஞ்சுகளை பொறித்து கோழியுடன் விட்டு வளர்த்து வருகிறார். அவைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவதாகவும் எல்லாவற்றிற்கும் சந்தையை நாடாமல் முடிந்தளவு சுயமாக முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமே இன்குபேட்டரை செய்ததற்கு காரணம் எனவும் தெரிவிக்கிறார்.
இதற்கு நண்பர்களின் உதவியும் ஆலோசனையும் இருந்ததாக உலகநாதன் கூறுகிறார். கற்றதையும் அறிந்ததையும் செயல்படுத்தி பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த இளைஞர் நல் முன்னுதாரணம் எனலாம்.