செய்தியாளர்: ச.குமரவேல்
அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி வரை வாரம் மூன்று முறை செல்லும் (22504) விவேக் எக்ஸ்பிரஸ் இன்று காலை கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காட்பாடி அருகே முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையத்திற்கு இடையே திடீரென ரயில் இன்ஜின் கப்ளிங் உடைந்து இன்ஜின் மட்டும் தனியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குச் சென்றது. இதனால் துண்டிக்கப்பட்ட 17 பெட்டிகளும் நடுவழியில் நின்றன.
இதனால் அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் பழைய இன்ஜினை மாற்ற முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் இரண்டு மாற்று இன்ஜின்களை வரவழைத்து பொருத்தினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதன் காரணமாக பிருந்தாவன் பயணிகள் ரயில் வாலாஜா ரயில் நிலையத்திலும், டபுள் டக்கர் ரயில் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. ரயில் தாமதம் காரணமாக பயணிகள் அவதியடைந்தனர்.