ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில், எட்டு நாட்கள் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்துடுமாறு நேற்று நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் கையெழுத்து பெற சென்றனர். ஆனால் முடியாமல் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், இன்று நீதிமன்ற ஊழியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று அமலாக்கதுறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தமிழ்நாடு காவலர்கள் மற்றும் ஆயுதப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் சிகிச்சை பெற்று வரும் 7-வது தளத்தில் மட்டும் SAG சிறப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ஆணையர் ராஜத் சதுர்வேதி மற்றும் காவல் ஆய்வாளர்களும் அங்கு இருக்கின்றனர்.