செந்தில் பாலாஜி புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீலச்சட்டை, தாடியுடன் செந்தில் பாலாஜி; புழல் சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்துவந்தது அமலாக்கத்துறை!

PT WEB

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய அறுவைச்சிகிச்சைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு இன்று காலை அனுமதியளித்தது.

செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை

இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக்கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒருநாளைக்கு 2 முறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும், அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்தான் புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 5 மணிக்கு புழல் சிறைக்கு 4 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறையினர், சிறை நடைமுறைகளை முடித்துக்கொண்டு 3 மணி நேரத்திற்குப் பின் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் துறையின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்ற காருக்கு முன்னும் பின்னும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் துறையின் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். 5 நாட்கள் காவல் முடிந்து மீண்டும் வரும் 12ஆம் தேதி புழல் சிறைக்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.