குப்பையில் கிடந்த முதியவர் PT WEP
தமிழ்நாடு

சிகிச்சையில் இருந்த முதியவரை குப்பையில் வீசிச்சென்ற அரசு மருத்துவமனை ஊழியர்கள்; திருப்பூர் கொடூரம்?

தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை ஊழியர்கள் குப்பையில் தூக்கி வீசி சென்ற அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.

PT WEB

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த முதியவர் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்கள் கடந்தும் முதியவரை பார்ப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் வார்டில் இருந்த முதியவரை வெளியே அழைத்து வந்துள்ளனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை தடுப்புச் சுவர் அருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் மேல் முதியவரைத் தூக்கி வீசி சென்றுள்ளனர்.

இதனையடுத்து முதியவர் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவரை சுற்றி ஈக்கள் மொய்த்துள்ளது. அவரைச் சுற்றி நாய்கள் குறைத்துக் கொண்டிருந்தது. முதியவரின் மீது மருத்துவமனை கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டுக்  கிடந்துள்ளது.

தாராபுரம் அரசு மருத்துவமனை

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனியார் ஆம்புலன்ஸ்  ஓட்டுநர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் நோயாளியை உள்ளே அழைத்துச் சென்ற மருத்துவம் பார்த்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை  குப்பையில் தூக்கி வீசி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.