ஓசுரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த காரணத்தால், சக ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் உலோக குழாய் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தார்.
இதனால் வேதனையடைந்த அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்கள், வரும் காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகளைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைவரும் ஒன்றிணைந்து 100 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களையும், அதில் ஆக்சிஜனை நிரப்புவதற்கு தேவையான 35 ஆயிரத்து 865 ரூபாய்க்கான காசோலையை ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் ஓசூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பூபதி ஆகியோரிடம் அளித்தனர்.