சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தகுந்த நேரத்தில் அவசர கதியில் மேற்கொள்வதால் வரும் பருவ மழை காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னன் காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக சார்பில் வரும் 17 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்., பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார்.
அதைத் தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’எதிர்கட்சி நாங்கள் தான் என அண்ணாமலை சொல்வது அவர் அவரது கட்சியை வளர்க்க தான்’ என்று கூறினார்.
மேலும், “சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால், அந்த பணிகள் முடியவில்லை. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக சென்னை மேயர் பிரியா சொல்கிறார். அவர் பாவம். தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இறுதி நேரத்தில் அவசர கதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வரும் பருவ மழை காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும்” என்று கூறினார்.
”சட்டப் பேரவையில் ஓபிஎஸ் தரப்புக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் சட்ட விதிப்படி நடந்துக் கொள்ள வேண்டும், ஓபிஎஸ்ஸிடம் கட்சியும் இல்லை அவர் கட்சியிலும் இல்லை. ஓபிஎஸ் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்? வேறு எங்காவது இடம் ஒதுக்கட்டும்.
திமுகவை வீழ்த்துவதற்காக கூட டிடிவி தினகரனை இணைத்துக் கொள்ள முடியாது. கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. இணைவதற்கு அவசியமே இல்லை, நாங்கள் இணையும் அளவுக்கு டிடிவியும், சசிகலாவும் பெரிய சக்தி இல்லை. டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும்” என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.