குன்னூர் அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் ஐந்து யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் தூதூர் மட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. வனப்பகுதி அருகே காலெக்கம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், 5 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன.
இதனால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக தேயிலை எஸ்டேட்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதற்கிடையே யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏதுவும் ஏற்படுவதற்கு முன்பே, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.