தமிழ்நாடு

வீட்டை இடித்து உணவு வகைகளை சாப்பிடும் யானை: காட்டுக்குள் விரட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை

வீட்டை இடித்து உணவு வகைகளை சாப்பிடும் யானை: காட்டுக்குள் விரட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை

webteam

கோவையில் வீட்டை இடித்து அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிடும் யானையை  பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பபகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க டஸ்கர் இன ஆண் யானை ஒன்று உணவுக்காக சுற்றி வந்துள்ளது. பகல் வேளையிலும் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த அந்த யானை, தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாகச் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க,  அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை காட்டிற்குள் விரட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காட்டிற்குள் சென்ற யானை மீண்டும் மருதமலைப் பகுதியிலிலே சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  5 மணியளவில் திடீரென்று ஊருக்குள் நுழைந்த யானை  குமரன் நகர் அருகே வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டை இடித்து அங்கிருந்த அரிசி, பருப்பு, புளி போன்ற உணவு பொருட்களை தின்று வீட்டை சூரையாடியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கேயே முகாமிட்டிருந்த யானையை, பொதுமக்கள் உதவியுடன் செந்தில் குமார் காட்டிற்குள் விரட்ட முயன்றுள்ளார்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வெகு நேரம்கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் அசம்பாவிதம் நடைபெறும் முன்னரே, யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்று பொதுமக்கள் கோர்க்கை வைத்துள்ளனர்.