தமிழ்நாடு

தந்தத்திற்காக கொல்லப்பட்ட யானை - 2 வனத்துறையினர் பணியிடை நீக்கம்

webteam

கிருஷ்ணனகிரியில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே உரிகம் வனப் பகுதியில் தந்தத்துக்காக ஆண் யானை கொல்லப்பட்டதாகவும், பின்னா் அந்த யானையைக் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறை உயா் அதிகாரிகள் பிலிக்கல் பகுதிக்குச் சென்று, யானை புதைக்கப்பட்ட இடத்தை பொக்லைன் உதவியுடன் தோண்டினா்.

யானை புதைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் வெறும் எலும்புக் கூடாக இருந்தது. அதில் யானையின் தலைப்பகுதியில் இருந்த மண்டை ஒட்டை வனத் துறையினா் சேகரித்து, அஞ்செட்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். பின்னர் பிலிக்கல், தாண்டியம் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், யானை இறந்த தகவல் குறித்து வனத்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததற்காகவும், ரோந்துப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் இருந்ததற்காகவும் வனக் காப்பாளா் மாணிக்கம், பிரிவு வனவா் வேணு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் தீபக் பில்கி உத்தரவிட்டார். இதே போல பிலிக்கல் மற்றும் தாண்டியம் பகுதியில் மேலும் 2 யானைகள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.