தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாள்களாக அரிசிக்கொம்பன் யானை சுற்றித் திரிந்தது. ஊருக்குள் புகுந்த யானை அட்டகாசம் செய்தது. இந்த யானையைப் பிடிக்க வனத் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்நிலையில், அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி இன்று அதிகாலை வனத் துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை வனத்துறை மற்றும் காவல் துறை வாகனங்கள் பாதுகாப்புடன் வனத்துறை லாரியில் ஏற்றப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட உள்ளது.
இந்த நிலையில், தேனியில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிக்கொம்பன் யானை மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு வன சோதனை சாவடி முன்பாக காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் மற்றும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. எனவே யானையால் சுற்றுலா பணிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறி இந்த முடிவை பரிசீலனை செய்ய கோரி போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து யானையை விட எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, அரிக்கொம்பன் யானையை அது நன்கு அறிந்த கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா பகுதியில் விடும் வகையில் நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவரது சார்பாக நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக முறையீடு செய்யப்பட்டது. இதனை மனுவாகத் தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, அரசு தரப்பில் மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது முண்டந்துறை புலிகள் சரணாலயாடர் வனப்பகுதியில் விட கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.