தாய் யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் வந்து செல்லும் யானைக் குட்டி, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் மூணாறு சின்ன கானல் பகுதி பழங்குடியினர் வசிக்கும் 301 காலனியில், மின்சாரம் தாக்கி 45 வயது பெண் யானை கடந்த வாரம் உயிரிழந்தது. உயிரிழந்த அந்த யானையின் 2 வயதான யானைக் குட்டி, தாய் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் வந்து வந்து செல்வது காண்போரை நெகிழ்ச்சியடைய வைப்பதாக அமைந்துள்ளது.
301 காலனி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருக்க அப்பகுதியில் பல மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பகுதிக்கு ஆகஸ்ட் 13 தேதி வந்த, 6 யானைகள் கொண்ட கூட்டத்தில் 45 வயதுடைய ஒரு யானை மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலியானது. உயிரிழந்த யானையின் உடலை அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் வனத்துறையினர் உடற்கூறு பரிசோதனை செய்து உடலை அடக்கம் செய்தனர். பலியான அந்த யானைக்கு 2 வயதில் யானைக்குட்டி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குட்டி யானை மற்றும் 5 யானைகள் தினமும் யானையை உடல் அடக்கம் செய்த இடத்திற்கு வந்து செல்கின்றது. யானையின் இந்த அன்பு, காண்போரையும் கேட்போரையும் நெகிழ்ச்சி அடைய வைப்பதாக அமைந்துள்ளது. யானைக் கூட்டம் இப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பாளர் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரமேஷ் கண்ணன்.