தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு: செப். 27 முதல் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

மின் கட்டண உயர்வு: செப். 27 முதல் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

webteam

மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக மின்சாரவாரியம் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழகம் முழுவதும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் மின்சார கட்டண உயர்வு அனைத்து விசைத்தறி உரிமையாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படுவதால் சராசரி ஒரு விசைத்தறி உரிமையாளர் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் அதிகப்படியாக செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே விசைத்தறி தொழில் மூலப் பொருளான நூல் விலை ஏற்றதால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு கூடுதலாக விசைத்தறி உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் வருகின்ற 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 25 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்படுவதுடன் ஜவுளி தொழில் சார்ந்த அனைத்து தொழில்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.