தமிழ்நாடு

பள்ளி பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்குக: மின்வாரியம் உத்தரவு

பள்ளி பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்குக: மின்வாரியம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது தடையற்ற மின் விநியோகத்திற்கான, அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு, மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத 10, 11 மற்றும் ஓராண்டு தடைபட்ட12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், நாளை மறுநாள் தொடங்குகிறது. தேர்வுகளின்போது தடையற்ற மின் விநியோகம் வழங்க அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும்போது தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதிகளை செய்ய தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், பராமரிப்புக்காக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள மின்மாற்றிகளை ஆய்வு செய்யவும், பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.