குடிபோதையில் உறங்கிய ஊழியர்கள் pt web
தமிழ்நாடு

சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு.. குடிபோதையில் அலுவலகத்திலேயே உறங்கிய ஊழியர்கள்

நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராத நிலையில், அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடலங்குடி துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்தே சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நேற்று மின்சாரம் தடைபட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராத நிலையில், அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கடலங்குடி துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது இரண்டு ஊழியர்கள் மது அருந்திவிட்டு ஆடை நழுவியது கூட தெரியாமல் குடிபோதையில் அலுவலகத்தின் உள்ளேயே படுத்து உறங்கியுள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை தட்டி எழுப்பி மின்நிறுத்தம் குறித்து தெரிவித்து அதனை சரி செய்ய கூறியுள்ளனர். இந்த சூழலில் இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் கவனமாக கையாளக்கூடிய மின்சாரத்தை குடிபோதையில் ஊழியர்கள் கையாண்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரியத்துறை அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை சரியான முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.