தமிழ்நாடு

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாதா ? உண்மை என்ன ?

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாதா ? உண்மை என்ன ?

webteam

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே தேர்தல் நடத்த தடையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18பேரும் எந்தவிதமான தேர்தலிலும் அல்லது இடைத்தேர்தலிலும் 5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்பதே அந்த செய்தி.

பலரும் இது உண்மையா என கேட்ட வண்ணம் உள்ளனர். பலருக்கும் இதில் குழப்பம் இருக்கிறது. சட்டம் என்ன சொல்கிறது என பார்க்கலாமா ? ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. மற்றபடி வேறு எங்கும் ஒரு இந்திய குடிமகன் தேர்தலில் போட்டியிட தடையில்லை. குறிப்பாக சபாநாயகரால் கட்சித்தாவல் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் , இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட எந்த தடையும் இல்லை. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 - தேர்தலை நடத்துவது, தகுதி இழப்பு போன்றவற்றை வரையறுத்துள்ளது. அதில் உச்சநீதிமன்றம் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நபர், 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மேலும் அரசியலமைப்பில் வேறு எந்த இடத்திலும் (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தவிர) தகுதி இழந்த உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசப்படவே இல்லை. 

சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போல 18 பேரும் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. அவ்வாறு பகிரப்படும் செய்தி போலி, சட்டத்தில் இல்லாத ஒன்று.