ஏப்ரல் 19 முதல் ஜூன் 4 வரை இந்தியா முழுக்க மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சூழலில், அதற்கு முன் நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்தவகையில், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தேர்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விக்கிரவாண்டி எம்.எல்.ஏ (விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் இவர்) புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இவர் எம்எல்ஏவாக இருந்த விக்கிரவாண்டி தொகுதி காலி தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அச்சமயத்தில் மக்களவை தேர்தல் தொடங்காமல் இருந்ததால், அது நடக்கும்பொழுது கூடவே இத்தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என கூறப்பட்டது. இருப்பினும் அதை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், விக்கிரமாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, ”விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் 14ஆம் தேதி தொடங்கும். ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள். மேலும் இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 13 தேதி நடைபெறும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், விக்கிரவாண்டி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.