தமிழ்நாடு

கட்சி இணையதளத்தில் இரட்டை இலை: தினகரனுக்கு நோட்டீஸ்

கட்சி இணையதளத்தில் இரட்டை இலை: தினகரனுக்கு நோட்டீஸ்

webteam

முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை கட்சி இணையதளத்தில் பயன்படுத்தியது ஏன் என விளக்கம் தருமாறு அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலைச் சின்னம், கடந்த 22ம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கட்சிப்பெயரை, ஓபிஎஸ் அணி அதிமுக புரட்சித் தலைவி அம்மா எனவும் சசிகலா அணி, அதிமுக அம்மா எனவும் மாற்றி வைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் கட்சி இணையதளத்தில் அதைப் பயன்படுத்தியது ஏன் என கேட்டு டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதிக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. அதிமுக இணையதளம் மற்றும் அது தொடர்பான ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் அச்சின்னம் இடம் பெற்றிருந்ததாகவும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.