தமிழ்நாடு

இளைஞர்களின் வீடு தேடி சென்று வருத்தம் தெரிவித்த காவலர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்..!

Rasus

சென்னை போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக நேரில் சென்று சம்பந்தபட்டவர்களிடம் காவல்துறையினர் வருத்தம் தெரிவித்தனர்.

சென்னை போரூர் பிரதான சாலையில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை, போரூர் காவல்நிலைய தலைமை காவலர் பாபு என்பவர் சாலையில் வைத்து தாக்கியதோடு, செல்ஃபோனை பறிமுதல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து புதிய தலைமுறையிலும் செய்தி வெளியானது.

இந்நிலையில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ராமாபுரத்தில் உள்ள சம்பந்தபட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். அப்போது இளைஞர்களிடமும், குடும்பத்தினரிடமும் வருத்தம் தெரிவித்தனர்.

அப்போது, தங்கள் மீதுதான் தவறு என்றும் இனி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டமாட்டோம் எனக் கூறி இளைஞர்கள் இருவரும் காவல்துறையினரிடம் மன்னிப்பு கோரினர். இதனையடுத்து காலவர் பாபுவிற்கு அங்கேயே உதவி ஆணையர் ஆலோசனை வழங்கினார். பின்னர் அந்த இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் என்ற புத்தகமும், இனிப்புகளும் அளித்து அறிவுரை வழங்கினர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது.