கட்டுமான பணி நடந்த பகுதியில் விளையாடியபோது தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் 45 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றி குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தை சேர்ந்தவர் குழந்தையேசு(வயது 40). இவரது மனைவி செலின். இவர்களுக்கு 2 வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (7-ந்தேதி) மாலை குழந்தை ஆல்வின் கட்டட பணி நடந்துவந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டப்பட்டு வந்த தண்ணீர்த்தொட்டியில் குழந்தை ஆல்வின் எதிர்பாராத விதமாக விழுந்ததாகத் தெரிகிறது.
தலைக்குப்புற தண்ணீர்த்தொட்டியில் விழுந்ததால் அங்கு இருந்த கான்கிரீட் கம்பி குழந்தை வாய் வழியே குத்தி முதுகு புறமாக வெளியே வந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் கம்பியை வெட்டி குழந்தையுடன் சேர்த்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையின் வாய்ப்பகுதியில் குத்தி மறுபக்கம் வெளிவந்த கம்பியை அறுவைசிகிச்சை செய்து மருத்துவர்கள் 45 நிமிடங்களில் அகற்றினர். குழந்தையின் சிகிச்சைத் தொடர்பாக தகவல் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் ‘குழந்தை வாயில் குத்திய கம்பியானது 59 செ.மீ நீளமுடையது. மேலும் கம்பி குத்திய பகுதி குழந்தையின் சுவாசக்குழல், மூளை ரத்தகுழாய், நரம்பு மண்டலம் அருகே அமைந்துள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.