தமிழ்நாடு

கன்றுக்குட்டியை தடவி தீவனம் வழங்கிய முதல்வர் பழனிசாமி 

webteam

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்ற முதலமைச்சர் பழனிசாமி பஃபல்லோ கால்நடைப் பண்ணையை பார்வையிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற அவர், நாடாளுமன்ற கூட்ட அரங்கில் உரையாற்றினார். அப்போது நகர உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுத்தார். 

மேலும், முதல்வர் முன்னிலையில் சுகாதாரத்துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. லண்டன் பயணத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி க்யூவ் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். 

இதையடுத்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற அவருக்கு நியூயார்க்கில் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக, பஃபல்லோ கால்நடைப் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு கால்நடைகளை பராமரிக்க செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்களை கேட்டறிந்து வளர்க்கப்பட்டு வரும் உயர்ரகக் கன்றுகளை பார்வையிட்டார். அங்குள்ள கன்றுக்குட்டிகளை தடவி, மாட்டுத் தீவனங்களை வழங்கினார். இதனையடுத்து  கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணையை முதல்வர் பார்வையிடவுள்ளார்.