உதயநிதி - இபிஎஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நான் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது தப்பா? வேறு யாரோ மூன்றாவது நபரிடம் வாங்கவில்லையே” - இபிஎஸ்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது, கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

EPS

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்களை இங்கே காணலாம்...

‘அதிமுக - தேமுதிக கூட்டணியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?’

"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஏற்பட்டுள்ளதால், நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரே அலைதான் வீசுகிறது, அது அதிமுக அலை. அதிமுக என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள்"

‘அதிமுக பாஜக-வோடு கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக முதல்வர் குற்றஞ்சாட்டுவது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?’

"அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும், இப்படியெல்லாம் யாரும் யாரையும் விமர்சனம் செய்ததே இல்லை.

ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கும் ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. அப்படி அமைக்கப்பட்ட பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள் என சந்தேகிக்கிறோம்"

‘மத்திய அரசை நீங்கள் விமர்சனம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?’

"பாஜகவுடன் முன்பு நாங்கள் கூட்டணியில் இருந்தோம், ஆனால் இப்போது இல்லை. திமுக மாதிரி நாங்கள் அல்ல; அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறியபின் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது, அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம். கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை, நாங்கள் அப்படியல்ல. கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை யார் அறிவித்தாலும் கடுமையாக எதிர்ப்போம்"

EPS

’கருத்துக்கணிப்புகளில் உங்களுக்கு பின்னடைவு உள்ளதே...?’

"அது தவறான பிரசாரம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மட்டுமன்றி அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிவிதமான செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்"

‘பணமில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற நிர்மலா சீதாராமன் கருத்து பற்றி...'

"தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்னை. இது குறித்து அவர்தான் கருத்து கூற வேண்டும்"

‘5 ஓபிஎஸ் ஒரே தொகுதியில் போட்டி என்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?

"ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர் செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள். ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர் இல்லை. அனைவரும் சமம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்"

‘மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?’

"அதிமுகவின் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவுதானே தவிர, எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல"

‘நீங்கள் காலில் விழுவதுபோன்ற புகைப்படங்களை காட்டுகிறாரே உதயநிதி?’

"அவர் காட்டட்டும். நான் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது தப்பா? வேற யாரோ மூன்றாவது நபரிடம் வாங்கவில்லையே நான்..?

இவர்களைபோல பிரதமரை எதிர்க்கிறோம் என வீரவசனமா பேசினேன்? இங்கு வசனம் பேசிவிட்டு, கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். அப்படியான தலைவர்கள்தான் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். அங்கே பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு இங்கே வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்” என்றார்.