தமிழ்நாடு

மின் கட்டண உயர்வைபோல் பேருந்து கட்டணமும் உயரும் - எடப்பாடி பழனிசாமி

மின் கட்டண உயர்வைபோல் பேருந்து கட்டணமும் உயரும் - எடப்பாடி பழனிசாமி

webteam

மின் கட்டண உயர்வை அடுத்து பேருந்து கட்டண உயர்வையும் ஆளும் அரசு அறிவிக்கும்; மேலும் 2026ல் மின் கட்டணம் 52 சதவீதமாக உயரும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கிணத்துக்கடவு தாமோதரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ’’திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் முதல் வேலை என்று கூறி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. ’திராவிட மாடல்’ என கூறிவரும் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதுதான் திராவிட மாடலா’’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ’’மின் கட்டண உயர்வு 12 முதல் 52 சதவீத மின்கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் வரை மின் கட்டண உயர்வை அமுல்படுத்த மின்சார ஆணையத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையால் வருகின்ற 2026இல் மின்சார கட்டணம் 52 சதவீதமாக உயரும். இதனால் ஏழை எளிய மக்களின் மீது பெரிய சுமையை ஆளும் ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 50 முதல் 150 சதவீத வரி உயர்வை அமல்படுத்தியுள்ளனர். விரைவில் மின் கட்டண உயர்வை போல பேருந்து கட்டண உயர்வையும் தமிழக அரசு கூடிய விரைவில் அறிவிக்கும்’’ என்ற அவர், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 200 லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.