தமிழ்நாடு

’முதல்வர் பதவி கடவுள் அருளால் கிடைத்தது; ஒருபோதும் அதை எண்ணியதில்லை’ - முதல்வர் பழனிசாமி

’முதல்வர் பதவி கடவுள் அருளால் கிடைத்தது; ஒருபோதும் அதை எண்ணியதில்லை’ - முதல்வர் பழனிசாமி

Sinekadhara

முதல்வர் என்ற பதவி கடவுள் அருளால் தனக்கு கிடைத்தது என்றும், முதல்வராக வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதும் இல்லை என்றும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகை பகுதியில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக அவர் பெரிய சோரகை பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் ஏறி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் ஜெயலலிதா கண்ட கனவுகளை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்திய அளவில் மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆய்வு கூட்டத்தின்போது மற்ற மாநில முதல்வர்கள் முன்னிலையில் என்னை பாராட்டினார். தமிழகத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் தமிழக அரசு சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அரசின்மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 43 ஆண்டுகாலமாக வெற்றிபெற முடியாத காரணத்தால்தான் எம்பி கனிமொழி இந்தத் தொகுதியில் தனது பரப்புரையை துவங்கினார். ஆனால் கனிமொழி மட்டுமல்ல; திமுகவில் எத்தனை தலைவர்கள் பரப்புரை செய்தாலும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு அதிமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறேன்.

மேலும், என்னை பழனிசாமி என்று அழைப்பதை விடுத்து எடப்பாடியார் என்று அழைக்கின்ற பெருமை இத்தொகுதியில் உள்ள உங்கள் அனைவருக்கும்தான் சேரும். முதலமைச்சர் பதவி என்பது கடவுள் அருளால்தான் எனக்குக் கிடைத்தது. முதல்வராக வேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியது கிடையாது’’ என்று பேசினார்.

பெரிய சோரகையில் உரையாற்றி பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வனவாசி, சாணார்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரப்புரையில் ஈடுபட்டார். வழியெங்கிலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.