செய்தியாளர்: மணிகண்டபிரபு
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்...
“திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. வாக்காளர்களையும் பொது மக்களையும் ஆடு மாடுகளை போல் பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்தினர்.
தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும், காவல்துறையும் அதனை கண்டு கொள்ளாமல் துணை நின்றனர். ஆட்சி அதிகாரத்தையும் பண பலத்தையும் படை பலத்தையும் பயன்படுத்தி பல தில்லுமுல்லுகளை செய்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
அதேபோன்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் தேர்தல் நியாயமாக சுதந்திரமாக நடைபெறாது என்பதால் அதிமுக போட்டியிடவில்லை. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெறும் 6 ஆயிரம் ஓட்டுக்கள்தான் அதிமுக குறைவாக பெற்றது. அப்படியிருக்க, இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நின்றால் அவர்கள் வெற்றி பெற வைக்கவா போகிறார்கள்? ஆட்சி அதிகாரத்தையும் பரிசுப் பொருட்களையும் பணத்தையும் கொடுத்து திமுக அமைச்சர்களை வார்டு வாரியாக போட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலை நடத்துவார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணமழை பொழியும், ஜனநாயக படுகொலை நடக்கும் என்பதால்தான் தேர்தலை புறக்கணித்துள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை கொட்டகையில் அடைத்து ஜனநாயக படுகொலை செய்தார்கள். அப்போது நானே நேரடியாக வாக்கு சேகரிப்பேன் எனக் கூறியதும் வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று தேர்தலை நடத்தினார்கள். இது போன்ற காரணங்களால்தான் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
சட்டமன்றம் வேறு நாடாளுமன்றம் வேறு. மக்கள் பிரித்துப் பார்த்துதான் வாக்கு செலுத்துகிறார்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் சிந்தனை செய்து வாக்களிக்கிறார்கள். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வித்தியாசமான முடிவுகளை கொடுத்துள்ளார்கள். பல இடங்களில் டெபாசிட் இழந்துதான் திமுக இன்று ஆட்சிக்கு வந்துள்ளது. அதேபோல கடந்த கால நாடாளுமன்றத் தேர்தல்களில் 38 இடங்களில் தோற்ற திமுகதான் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றி தோல்வி மாறி மாறிதான் தரும். பல அரசியல் கட்சிகள் தோல்வி பெற்று இறுதியில் வெற்றி பெற்றுள்ளன. அதுபோல 2026 இல் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.