பெற்றோர் முற்றுகை pt desk
தமிழ்நாடு

எடப்பாடி: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பெற்றோர்கள் கூடி தலைமை ஆசிரியரின் அறை முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அடிக்கடி கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அப்படி நேற்று (15ஆம் தேதி) மதியமும் வகுப்பு நேரத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களும் பள்ளி வகுப்பு நேரத்தில் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

govt school

இந்நிலையில், காயம் ஏற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களோடு வந்து இன்று உதவி தலைமை ஆசிரியரை சந்தித்து கேள்வி எழுப்பினர். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் தொழிலியல் ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து, தலைமை ஆசிரியர் அறையின் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தங்களது குழந்தைகளை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார், உதவி தலைமையாசிரியர் செந்தில் குமார் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது.