எடப்பாடி பழனிசாமி - எம்.ஜி.ஆர், ஜானகி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அ.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது‌” - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அ.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது‌; சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் தான் தேர்தலுக்கு உள்ளது‌. தேர்தலுக்கு தயாராகுவோம் என தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

PT WEB

செய்தியாளர்- விக்னேஷ்முத்து

முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலை நெடுகிலும் தொண்டர்கள் கொடியசைத்து, மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம், தவில், பறை இசை முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜானகி நூற்றாண்டு விழா

விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, முதலில் எம்ஜிஆர் - ஜானகி ஆகியோரின் அறிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின் விழாவில் அ‌.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியவை, இங்கே...

“நூற்றாண்டு விழாவுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் அழகாக பேசினர். அதேபோல சரோஜாதேவி, லதா, சச்சு, பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை வரவேற்புரை ஆற்றிய கழகத்தினுடைய மூத்த நிர்வாகி, அமைச்சர் பொன்னையன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். 

“எம்ஜிஆர், ஜானகி என இருவருக்குமே நூற்றாண்டு கொண்டாடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது”

இது ஒரு குடும்ப விழா. நம் குடும்பத்தில் ஒரு விழா எடுத்தால் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுவோமோ அப்படி இந்த விழா நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உடைய துணைவியார் போற்றுதலுக்குரிய மறைந்த ஜானகி அம்மாள் அவர்களின் நூற்றாண்டு விழா இது. எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நான் முதலமைச்சராக இருந்த பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தேன்.

ஜானகி நூற்றாண்டு விழா

அப்போது 32 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இதுவரைக்கும் எந்த ஒரு தலைவருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா நடத்துவது இல்லை. ஆனால் அதிமுகவில் மட்டும் எம்ஜிஆருக்கு நடத்தப்பட்டது‌. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் பொழுதும் அந்த மாவட்ட மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை கேட்டு அறிந்து அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது‌.

32 மாவட்டங்களிலும் சுமார் 562 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது எனது ஆட்சியில்தான். எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகிக்கும் நான் பொதுச்செயலாளராக இருக்கும்பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாக்கியம் கிடைத்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  

“எம்ஜிஆர் - ஜானகி அம்மாவின் காதல்...”

17 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஜானகி அம்மாள். எம்ஜிஆருக்கும் ஜானகி அம்மாவுக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் நடந்தது. பின்னர் திருமணத்துக்கு பிறகு எம்ஜிஆருக்கு சேவை செய்ய தன்னையே அர்ப்பணித்தவர் ஜானகி அம்மாள். சோதனையான காலகட்டத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்க பலமாக இருந்தவர் ஜானகி அம்மாள்.

எம்.ஜி.ஆர்‌‌. சுடப்பட்ட போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஜானகி அம்மாள் உடனிருந்து பணிவிடை செய்து பூரண குணம் அலைந்து மக்கள் சேவை ஆற்ற வரும் வரை சேவை செய்தவர் ஜானகி அம்மாள்.

எம்ஜிஆர் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது அமெரிக்கா சென்ற சிகிச்சை பெற்ற போது பல்வேறு விதமான கருத்துக்கள் பேசப்பட்டது. அதையெல்லாம் முறியடித்து, அமெரிக்காவில் அற்புதமான சிகிச்சை எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பூரண குணமாகி மீண்டும் முழுமையான எம்.ஜி.ஆராக அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்தது ஜானகி அம்மையார்‌தான். எம்ஜிஆரின் மீண்டும் நல் ஆரோக்கியத்துடன் கொண்டு வந்த பெருமை ஜானகி அம்மையாரையே சேரும்.

“சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்-ன் சபதம்...”

அதிமுக உருவாக்கப்பட்டபோது பல்வேறு சோதனைகளை தாங்கியவர் ஜானகி. கருணாநிதி அவர்களால் பல்வேறு இடையூறு ஏற்பட்டது. எம்ஜிஆர் சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த போது மைக் அணைக்கப்பட்டது. அப்போது செருப்பு, புத்தகம் வீசப்பட்டது. இருந்தாலும் எம்ஜிஆர் பேசிக் கொண்டே இருந்தார்.

பேசி முடிக்கும் பொழுது சட்டமன்றத்தில் எம்ஜிஆர், ‘நீங்கள் எவ்வளவு அவமானம் செய்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் நம் சட்டமன்றத்தில் நுழையும் பொழுது தமிழக மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக வருவேன்’ என சபதம் இட்டார்.

பின்னர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக சட்டமன்றத்தில் நுழைந்தார் எம்ஜிஆர்.

“எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு...”

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கழகம் இரண்டாக பிளவு பட்டது. அந்த பிளவுபட்ட காலத்தை ஒன்றாக இணைத்தவர் ஜானகி அம்மையார். எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என நினைத்தார் ஜானகி அம்மையார். ஏற்கெனவே இதுதொடர்பாக இருவரும் ஒருமித்தகருத்தோடு பேசி முடிவு செய்தனர். அதனால் கழகம் பிளவுப்பட்ட நேரத்தில் தேர்தலை சந்தித்தபோது எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது இரட்டை இலை சின்னம் வழக்கு காரணமாக முடக்கப்பட்டது.

ஜானகி அம்மா, ஜெயலலிதா அவர்களை அழைத்து ‘கழகத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும்’ என ஒப்படைத்தார். இதையடுத்து கழகம் ஒன்றாக இணைந்தது. இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்‌.

எம்.ஜி.ஆர் உடன் ஜானகி, ஜெயலலிதா

சின்னம் கிடைத்த உடனேயே இரட்டை இலைக்கு வெற்றி கிடைத்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலகத்தை தலைமையேற்று நடத்திய போது பல்வேறு சோதனைகள் அம்மாவுக்கு நிகழ்ந்தது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது எந்த அளவுக்கு சோதனை ஏற்பட்டதோ அதைவிட அதிகமாக இம்முறை ஏற்பட்டது.

“அதிமுக-வை அழிக்க முடியாது”

எம்ஜிஆர் போன்று அதிக சோதனைகளை கண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதிமுக எப்போதெல்லாம் பிரச்னைகளை சந்திக்குமோ அப்போதெல்லாம் வெற்றி கிடைக்கும். அதேபோலதான் இன்று நமது இயக்கத்தை அழிக்க நினைத்தாலும் அது நடக்காது. ஒருபோதும் அவர்களது எண்ணம் நிறைவேறாது‌. எம்ஜிஆர் உடனே முதலமைச்சராக வரவில்லை. சட்டமன்ற உறுப்பினராக தேர்தல் பரப்புரை செய்து அதன் பிறகுதான் ஆட்சி பிடித்தார் எம்.ஜி‌.ஆர்.

MGR

மக்களோடு மக்களாக இருந்து மக்களின் எண்ணத்தைப் புரிந்து ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர் என மக்கள் தீர்மானித்தனர். எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றியும் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து தோல்வியும் சந்திப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ஏன், திமுக பத்தாண்டுகள் தொடர் தோல்வியை சந்திக்க வில்லையா? அப்படி பத்து ஆண்டுகள் தோல்வியை சந்தித்த திமுக இன்று ஆட்சியில் இல்லையா? கால சூழல் அரசு சூழலுக்கு ஏற்றவாறு ஆட்சி மாறும். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் போன்று பிற எந்த கட்சிக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கிடையாது. இன்றும் நாம் குடும்பம் போல் உள்ளோம். அதுதான் நாம்.

திமுக மீதான விமர்சனம்:

அதிமுக என்பது குடும்பம். குடும்ப கட்சி. திமுக என்பது கருணாநிதியின் குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் கட்சிக்கு தலைவராக மாற முடியும். ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால் அதிமுகவுக்கு அப்படி இல்லை. உழைக்கும் நபர்கள் யார் வேண்டுமானாலும் கட்சிக்கு பொதுச் செயலாளராக வரலாம்‌. அதிமுகவில் ஒரு தொண்டர் கூட முதலமைச்சராக மாறலாம். இதுதான் குடும்ப கட்சி.

உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி

திமுக மற்றும் அதிமுகவுக்கு உள்ள வேறுபாடு இதுதான். தமிழகத்தை திமுக மற்றும் அதிமுக ஆண்டு இருக்கிறது. ஆனால் அதிமுகதான் தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. சுமார் 31 ஆண்டு காலம் நாம் ஆட்சி செய்துள்ளோம். நல்லாட்சி தந்த கட்சி அதிமுக-தான். 31 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக அரசு தீட்டிய திட்டம்தான்.

“எம்.ஜி.ஆர் மாளிமை மீதான தாக்குதல்...” 

இன்று உள்ள எம்ஜிஆர் மாளிகை என்பது ஜானகி அம்மாள் தானமாக வழங்கிய கட்டிடம். நாம் கோயிலாக வணங்கிய கட்டடத்தை சில பேர் உள்ளே நுழைந்து சேதப்படுத்தினர். இந்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். கொடுத்து கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அதிமுகவை அழிக்க எவராலும் முடியாது‌. இன்னும் சொல்லப்போனால் இன்னும் குறுகிய காலம்தான் இருக்கிறது தேர்தலுக்கு. 15 மாதம்தான் தேர்தலுக்கு உள்ளது‌. தேர்தலுக்கு தயாராகுவோம்” என்றார்.

இந்த விழாவில் எம்.ஜி.ஆர். செயற்கை தொழில்நுட்பம் மூலம் பேசியதும் குறிப்பிடத்தக்கது. அதை, இங்கே காணலாம்...