தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் எடப்பாடி பழனிசாமி!

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் எடப்பாடி பழனிசாமி!

webteam

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற்றார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தேர்தலில் 66 இடங்களை வென்ற அதிமுக இம்முறை பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவியது. இதனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் அன்றைய கூட்டம் முடிந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவை நாளை கூடவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் கூடியது. அதிமுக நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூன்று பேர் பங்கேற்காத நிலையில், 63 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் இறுதியாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.