ஜாபர் சாதிக், அமீர் pt web
தமிழ்நாடு

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், அமீர் தொடர்புடைய 30+ இடங்களில் ED சோதனை! முழு விவரம்!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் மற்றும் அவர்களது நண்பர்கள் தொழில்முறை நண்பர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

webteam

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் ஐந்து பேரை கடந்த மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்களை இந்தோனேஷியா, மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் கடத்தி இருப்பது தெரியவந்தது.

ed

இதனையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான வீடு மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இயக்குனர் அமீரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை:

மேலும், ஜாபர் சாதிக் தயாரித்து வரும் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தின் இயக்குனர் அமீரிடமும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளதால் அதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை:

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் போதைப் பொருள் வழக்கு தொடர்பாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரது தொழில் பார்ட்னர்களான இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு தொடர்புடைய சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமீர்,ஜாபர் சாதிக்

எங்கெங்கு சோதனை நடைபெறுகிறது?

மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் அமைந்துள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அவரது JSM ரெசிடென்ஸ் அலுவலகம், தி.நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகம், சேத்துப்பட்டு முக்தா கார்டன் பகுதியில் உள்ள இயக்குனர் அமீரின் உறவினர் வீடு, கீழ்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் உள்ள ஷேக் முகமது நிஷார் என்பவரது வீடு, 'ஜாக்கி' என்ற திரைப்படத்திற்கு அக்கவுண்டென்ட் வேலை பார்த்து வந்த ரகு என்பவரின் கொடுங்கையூரில் உள்ள வீடு, பெசன்ட் நகரில் உள்ள புகாரி ஹோட்டல் ஆகிய இடங்களில் சோதனை செய்யப்படுகிறது.

அதேபோல் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள பசிரோ டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் அலுவலகம், அடையாறில் உள்ள புகாரி ஹோட்டல் உரிமையாளர் CM.புகாரி வீடு, வெட்டுவாங்கேணியில் உள்ள CM.புஹாரியின் தாய் வீடு, பெரம்பூரில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வரும் சகோதரர்களான முகேஷ், யுகேஷ், லலித் குமார் ஆகியோரின் வீடு என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக்

முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை:

ஜாபர் சாதிக் மற்றும் அவரது தொழில் பார்ட்னர்களிடம், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதால் அதை பெற்று இச்சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஜாபர் சாதிக் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை எந்தெந்த தொழிலில் முதலீடு செய்துள்ளார்? யாருக்கெல்லாம் அந்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்? என்பது தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை:

சட்டவிரோத பணப்பரிமாற்ற பணத்தை பட தயாரிப்பில் பயன்படுத்தினாரா? என்ற கோணத்திலும் அமீர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்த விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.