அமலாக்கத்துறை ரெய்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ED சோதனைக்கு உள்ளானவர்கள் யார்... யார்?

PT WEB

சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சி, கோவை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, வேலூர் மாவட்டங்களிலும் நேற்று அமலாக்கத்துறையின் சோதனை நடந்தது.

எஸ்ஆர் குழுமத்துடன் தொழில்ரீதியான உறவு கொண்டவர்கள், ஆடிட்டர் சண்முகராஜா, ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை மேலாளர் விக்டர் மற்றும் முகப்பேரில் உள்ள பொதுப்பணித் திலகம் என்கிற பொறியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ் ஆர் குழுமம், வரிஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது.

சோதனை குறிப்பாக புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், அவரது நண்பர் திண்டுக்கல் ரத்தினம் தொடர்புடைய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமச்சந்திரனின் வீடு, புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள அலுவலகமும் சோதனைக்குள்ளானது.

புதுக்கோட்டை நிஜாம் காலனியில் அமைந்துள்ள மணல் ராமச்சந்திரனின் உறவினர் மணிவண்ணன் வீட்டிலும் மழராயன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரனின் அக்கா மகனான வீரப்பன் வீட்டிலும் குவாரி தொழிலில் நண்பரான புனல்குளம் சண்முகம் வீட்டிலும் சோதனை நடந்தது

தொழிலதிபர் ராமச்சந்திரன்

ஆரம்ப காலகட்டத்தில் திண்டுக்கல்லில் சர்வேயராக பணியாற்றியவர் திண்டுக்கல் ரத்தினம். 2001-2006 ஆம் ஆண்டு முதல் மணல் குவாரியை ஏலம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட இவர், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிற தொழில்களையும் செய்து வருகிறார்.

திண்டுக்கல் ரத்தினம்

திண்டுக்கல் ரத்தினத்தின் உறவினரான புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டை சேர்ந்த கரிகாலன் தற்போது மணல் குவாரிகளை அதிகஅளவில் ஏலம் எடுத்து உள்ள நிலையில் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்று பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மணல் குவாரியின் ஒப்பந்ததாரரும் புதுக்கோட்டை ராமச்சந்திரன்தான். அங்கு ஒப்பந்ததாரர் யாரும் இல்லாத நிலையில், குவாரி மேற்பார்வையாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அள்ளப்படும் மணல், செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்துவைக்கப்படுகிறது. அதிகாரிகள் வந்தபோது பணியாளர்கள் அனைவரும் தப்பிச்சென்றதால், பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் கடந்த 6 மாதங்களாக செயல்ப்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் உள்ள அலுவலகத்தில், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் கரூரிலும் 2 மணல் குவாரிகளையும் ஒப்பந்தம் எடுத்துள்ளார். நன்னியூர் புதூர், நெரூ ஆகிய இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு, வாங்கல் அருகில் உள்ள கணபதிபாளையம் என்ற இடத்தில் உள்ள கிடங்கில் சேமிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை அடுத்து இங்கு நேற்று விற்பனை நிறுத்தப்பட்டது.

மணல் குவாரிகள், நீர்வளத்துறையின் கீழ்வரும் நிலையில், மணல் ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை உற்று கவனிக்கப்படுகிறது.