ED Officer pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: மருத்துவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல் - கையும் களவுமாக சிக்கிய ED அதிகாரி

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

webteam

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி

இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2023-ஆம் ஆண்டு அன்கிட் திவாரி பணியில் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறைக்கு விசாரணை வந்துள்ளது என்றும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதற்கு டாக்டர் சுரேஷ் பாபு ஒத்துக்கொள்ளாததால் இறுதியாக ரூ.51 லட்சம் தந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் 01.11.23 அன்று மதுரை - நத்தம் சாலையில் ரூ.20 லட்சம் பணத்தை டாக்டர் சுரேஷ்பாபு அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று டாக்டர் சுரேஷ்பாபுவை மீண்டும் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரி, மீதியுள்ள 31 லட்சத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார்.

Vigilance office

இந்நிலையில் மருத்துவர் சுரேஷ்பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜனிடம் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூபாய் 20 லட்சத்தை, டாக்டர் சுரேஷ்பாபுவிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று (01.12.23) அதிகாலை திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி திவாரியின் காரில் உள்ள டிக்கியில் டாக்டர் சுரேஷ்பாபு பணத்தை வைத்துள்ளார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி திவாரி காரை எடுத்துக்கொண்டு வேகமாக மதுரை நோக்கி சென்றார். அப்போது போலீசார் தன் காரை தொடர்ந்து வருவதைக் கண்ட அமலாக்கத்துறை அதிகாரி வேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். தொடர்ந்து காரை விரட்டிச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், கொடைரோடு சுங்கச்சாவடியில் வைத்து மடக்கிப் பிடித்து அன்கிட் திவாரியை கைது செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ரூ.20 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Car Seized

கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரியை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன் ஆகியோர் கடந்த 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு பின்னணியில் யாரும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் பெற்றதாக அமலாகத்துறை அதிகாரி திண்டுக்கலில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.