Saleem
Saleem pt desk
தமிழ்நாடு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்-ஐ மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளனர். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நிலையில், இவ்வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jaffer sadiq

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீமுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சலீம் ஆஜரானார். இவரிடம் சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பின் சலீம் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சலீமிடம் நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் கடந்த 10 ஆண்டுகளாக சேர்த்த சொத்துக்கள் எவ்வளவு, வங்கி பணபரிவர்த்தனை ஆவணங்கள் எங்கே, திரைப்பட தயாரிப்பு தொடர்புடைய ஆவணங்கள் எங்கே என அனைத்தையும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வீடியோ பதிவு செய்யப்பட்ட இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்க உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.