Chettinad group pt desk
தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு: செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான ரூ.298.21 கோடி சொத்து முடக்கம் - நடந்தது என்ன?

டெண்டர் முறைகேடு வழக்கில் சவுத் இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய ரூ.298 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்திற்காக நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில், போடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Freeze assets

தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன், சீனிவாச சங்கர் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு டெண்டர் ஒதுக்கீடு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த அதிகாரிகள் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சாதகமாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு நிலக்கரியை எடுத்து வர 2011 இல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை 1,267 கோடி ரூபாய் செலவானதாக போலியான கணக்கு காட்டி டேன்ஜட்கோ நிறுவனத்தில் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தான் டேன்ஜட்கோ தலைவர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய போது, இந்த காலகட்டத்தில் நிலக்கரி போக்குவரத்திற்கான செலவு 239 கோடி ரூபாய் மட்டுமே சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தால் செலுத்தப்பட்டது என பதில் அளித்துள்ளது. ஆனால், அப்போது பணியில் இருந்த அதிகாரிகளே அதை மறைத்துள்ளனர்.

Freeze assets

முதல் கட்டமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையிலும் ஆவணங்களின் அடிப்படையில் 908 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மெகா மோசடி தொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் விசாரணையை துவங்கினர். இந்த ஊழலில் தொடர்புடைய தலைமை பொறியாளராக இருந்த பழனியப்பன் இயக்குனராக இருந்த செல்லப்பன் மற்றும் அதிகாரி மனோகரன் பொறியாளர் நரசிம்மன் பொறியாளர் சீனிவாச சங்கர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பழனியப்பன், வெஸ்டர்ன் ஏஜென்சி நிறுவனம் அதன் நிர்வாகிகள் ராஜன் மற்றும் குஞ்சு கண்ணன் என 10 பேர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

குறிப்பாக செட்டிநாடு குழுமத்தைச் சார்ந்த சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு வருமானவரி சோதனை நடத்தப்பட்ட போது, 700 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பாதித்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் குவிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மோசடி செய்த பணம் யார் யாருக்கெல்லாம் சென்றுள்ளது? என்பது குறித்த வங்கி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து அதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.