செந்தில் பாலாஜி முகநூல்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு: பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு மேலும் அவகாசம்!

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கோரிய நிலையில், அமலாக்கத்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: வி.எம். சுப்பையா

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்தவகையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டும் பதிவு செய்தது. இதனையடுத்து, தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து, அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

செந்தில் பாலாஜி

முன்னதாக, செந்தில் பாலாஜியின் வழக்கானது இன்று இறுதி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.