ED Raid pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: ஏழை இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி பணப்பரிமாற்றம் - ED விசாரணை 4 பேர் கைது

webteam

செய்தியாளர்: B.R.நரேஷ்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே குமாராஜிபேட்டை காலனியைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் தமிழரசன் (25), மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகன் அரவிந்தன் (26), ரத்தினம் என்பவரின் மகன் பிரகாஷ் (25) ஆகிய மூன்று பேரும் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தற்காலிக ஊழியர்களாக வேலை பார்த்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்றுவிட்டனர். இந்நிலையில், இளைஞர்கள் மூன்று பேரின் வங்கிக் கணக்கில் சுமார் 3 கோடி ரூபாய் ஆன்லைன் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ED Raid

இதனை அடுத்து 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 வாகனங்களில் நேற்று காலை குமாராஜ்பேட்டை காலனி, மோட்டூரில் உள்ள இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இளைஞர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், அவர்களின் குடும்பப் பின்னணி, தொழில், தொடர்புகள், பணப் பரிமாற்றம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் இளைஞர்களிடம் துருவித் துருவி விசாரணை செய்து விவரங்கள் சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழரசன் தந்த தகவலின் பேரில் கிருஷ்ணன் என்பவரின் மகள்களான ஜானகி, அருணா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. முடிவில் தமிழரசன், அரவிந்தன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்த அமலாக்கத் துறையினர் அவர்களை பெங்களூரு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ed

இதனிடையே இளைஞர்கள் 3 பேரும் வேலைக்காக அஜ்மல் என்பவரை சென்னையில் சந்தித்ததாகவும், அவர் மூலம் மூன்று பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1 கோடி வீதம் 3 கோடி ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் தெரிகிறது.

அஜ்மல் என்பவர் ரூ.8 கோடி அளவுக்கு ஹவாலா பணம் மோசடி செய்தது தொடர்பாக ஆந்திர மாநிலம் சீராளா காவல் நிலையத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அஜ்மல் என்பவர்தான் இந்த மூன்று இளைஞர்கள் வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து இளைஞர்கள் 3 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், நான்கு பேரை கைது செய்துள்ள சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.