தமிழ்நாடு

‘பக்கத்து மாவட்டம் கூட போக முடியவில்லை’ : இ-பாஸ் முறையால் புலம்பும் மக்கள்!!

‘பக்கத்து மாவட்டம் கூட போக முடியவில்லை’ : இ-பாஸ் முறையால் புலம்பும் மக்கள்!!

webteam

அண்டை மாவட்டங்களுக்குச் செல்லக் கூட இபாஸ் தேவைப்படுவதால் கடும் அவதியாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்டங்களுக்கு இடையே இபாஸ் இல்லாமல் செல்ல அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. முழு ஊரடங்கு, பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு என அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டன. தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே இபாஸ் இல்லாமல் செல்லலாம். மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும் இபாஸ் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இது மிகவும் அவதியைத் தருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட எல்லைக்குள் இபாஸ் தேவையில்லை என்பதை போல மாவட்டங்களை கடந்து செல்லவும் இபாஸ் தேவை இல்லை என அறிவிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. அருகில் உள்ள மாவட்டங்களில் தேவை இருப்பவர்கள், அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக வலைதளங்களில் தங்களது அவதிகளை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஒருவர், பொதுப்போக்குவரத்தை தடை செய்து வைத்துகொள்ளலாம். ஆனால் தனியார் வாகனங்களை உரிய சமூக இடைவெளிகளுடன் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.