வெடிகுண்டு மிரட்டல் pt desk
தமிழ்நாடு

தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - 3 நாட்களில் 2வது முறையாக வந்த இ-மெயில்... மதுரையில் பரபரப்பு

மதுரையில் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா மற்றும் மதுரை பொன்மேனி ஜீவனா ஸ்கூல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கடந்த திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் அனுப்பப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை நடத்தினர். இதில், எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில், இன்று மதுரையில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் உள்ள ஜேசி ரெஸிடென்ஸி, விமான நிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஹோட்டல் ஜெர்மானஸ் உள்ளிட்ட 4 ஐந்து நட்சத்திர ஓட்டங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் தொடர் வெடிகுண்டு மிரட்டல், இமெயில்களால் மதுரையில் மக்களிடையே அச்சம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.