எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் pt web
தமிழ்நாடு

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி: எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்

PT WEB

கோயில் திருவிழாக்களில், பக்தர்கள் விட்டுச்செல்லும் எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், அந்த நடைமுறைக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

கரூர் நெரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில்தான் சர்ச்சைக்குரிய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அவ்வழக்கில் மனுதாரர் நவீன்குமார் தன் மனுவில், "நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் வரும் மே 18 ஆம் தேதி நடக்கவுள்ள ஆராதனை விழாவின் போது, சில பக்தர்கள் உணவருந்திய பிறகு, அந்த இலையில் அங்கப்பிரதட்சண வேண்டுதலை நிறைவேற்ற பிற பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இக்கோயிலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இத்திருவிழாவில், இறுதி நிகழ்ச்சியாக இந்த வேண்டுதல் மேற்கொள்ளப்படும்.

அதாவது சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ள பிற பக்தர்கள் உணவு உண்ட பின்பு, அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்வர். இந்த வேண்டுதலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

வாகைகுளம்

இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 17-ம் தேதி "கிராமங்களில் வழக்கமான மத நிகழ்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி பெற வேண்டும். எனவே, மனுதாரருக்கு அனுமதி வழங்குவது பற்றிய கேள்வியே இல்லை. சாதிப்பாகுபாடு இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு  உள்ளது.

பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை. வழிபாட்டு உரிமை,    அடிப்படை உரிமையை மனுதாரர் இவ்விஷயத்தில் பயன்படுத்த முடியும். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. எனவே இந்த விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது" எனக் கூறினார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதமொன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் முற்போக்கான சமூகத்திற்கு எதிரான வகையில் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொளத்தூர் மணி

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிராக நீதிபதி சுவாமிநாதனின் நிலைப்பாடு உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக சுவாமிநாதன் தொடர்வது சரியல்ல.

நீதிபதி சுவாமிநாதன் இதுவரை வழங்கி உள்ள தீர்ப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீதிபதி சுவாமிநாதனால் ஏற்படும் நீதியின் கருச்சிதைவை தடுக்கமுடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுதலுக்கு தடை விதிக்கப்பட்டது எப்போது?

முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்ட போது, அங்குள்ள உயர்நீதிமன்றமும் ‘தடை இல்லை’ என்று கூறியது. ஆனால் அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, “இப்படிப்பட்ட சடங்குகள் பொது ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது” என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்றம்

அதேநேரம், “500 வருடங்களாக நடைபெற்று வரும் சடங்கை மாற்ற வேண்டாம்” என எதிர்த்தரப்பினர் வாதிட்டனர். இருதரப்பையும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், தீண்டாமைக்கு ஈடாக கருதி இந்தச் சடங்குக்குத் தடை விதித்தார். இந்நிலையில் தற்போது இச்சடங்கிறகு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.