செய்தியாளர்: மோகன்ராஜ்
கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தர்மபுரியில் உள்ள முதுகலை விரிவாக்க மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்ததாகவும் ஒரு சிலர் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்ததாகவும் பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைக்கப் பெற்றன.
அதன் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
முறைகேடு புகார்களுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களிடம் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது தொடர்பான ஆவணங்களையும் சேகரித்து வருகின்றனர்.