சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, அண்ணாவின் பெயரை தன்னுடைய பேச்சில் குறிப்பிடாததற்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் இன்று கதர் மற்றும் துணிநூல் துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய ஈரோடு கிழக்கு உறுப்பினர் திருமகன் ஈவெரா, பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தள்ளுபடி மானியத்திட்டத்தின் கீழ் விற்பனைக்கு ஏற்ப பருத்திக்கு விழுக்காடு அடிப்படையில் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும், கைத்தறிக்கு கோ ஆப்டெக்ஸ் இருப்பது போன்று, விசைத்தறி ரகத்திற்கும் விற்பனை மையங்கள் அமைத்துத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய பேரவை முன்னவர் துரைமுருகன், மதிப்பிற்குரிய அண்ணன் சம்பத்தின் பேரன் ஓமந்தூரார், காமராஜரை ஞாபகம் வைத்து கூறியுள்ளார். ஆனால், அண்ணாவை விட்டுவிட்டார். தெரியாமல் விட்டிருந்தால் பிரச்னை இல்லை, வேண்டுமென்றே விட்டுவிட்டால் விவாதத்திற்குரியது என தெரிவித்தார். அப்போது எழுந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை, கலைஞரை வாழ்த்தினால் அண்ணாவை வாழ்த்தியதுபோல எனக் கூறினார்.
அதற்கு தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்த துரைமுருகன், ’’அப்போ செல்வப் பெருந்தகைக்கு நன்றி கூறினால் காமராஜருக்கு கூறியதுபோல் ஆகிவிடுமா எனக் கிண்டலாகத் தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய திருமகன் ஈவெரா, அறிஞர் அண்ணாவின் பெயர் தவறுதலாக விடுபட்டுள்ளது. அண்ணாவின்மேல் எனக்கு மரியாதை உண்டு. உங்களிடம் என்னால் விவாதம் செய்ய முடியுமா? என சிரித்துக்கொண்டே கூறியதால் அவையில் சிரிப்பலை நீடித்தது.