வேலூரை அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்று நிதிநிலை அறிக்கை குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கு பேராசிரியர். நாங்கள் எல்லாம் அவரது மாணவர்கள். அவர் சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம். சட்டத்தை படித்து விட்டு சட்டப் பேரவையின் முன்னவராக இருக்கிறார். அவரைப் போல அவை முன்னவராக யாராலும் இருக்க முடியாது. காட்பாடி மக்களுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார். அவர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளாதீர்கள் மக்களே!” என பேசி அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் செய்துள்ள பணிகளை மேற்கோள்காட்டி பேசினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “நேரு பேசும்போது சொன்னார், நான் சீனியர் - நான் சொல்வதை எல்லாம் கேட்பேன் என்று. அதெல்லாம் கிடையாது. இந்த பொதுக் கூட்டத்தில் நான் முதலில் பேசுகிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் அதையே கேட்கவில்லை. முதலில் பேச எழுந்து போய் விட்டார். காட்பாடி நகரம் நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது. காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் ‘அதிக வழக்குகள் வருகிறது; சமாளிக்க முடியவில்லை’ என டிஎஸ்பி சொன்னார். சட்டப் பேரவையில் துண்டுச் சீட்டில் எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப் பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்க அறிவித்தார்.
அம்மாவுக்கு ஆயிரம், பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு! பஸ் விட்டிருக்கோம்... போர் அடிச்சா பஸ் ஏறி ஆற்காடு போங்க. அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறி குடியாத்தம் போங்க. யாரு என்ன கேட்கப் போகிறார்கள்? இதேபோல 23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கிறோம்.
என்னை சமீபத்தில் ஒரு தாசில்தார் சந்தித்தார். நான்தான் ‘முதியோர் உதவித் தொகை கொடுக்கும் தாசில்தார்’ என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் நான் ‘நீங்கள் கொடுக்கிற தாசில்தாரா, இல்ல... (வாங்குற தாசில்தாரா)’ என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுக்கிற தாசில்தார் தான் சார் என்று பதில் சொன்னார். தாசில்தார் அலுவலகங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். 15,000... 15,000 என்று ஏலம் போடுகிறார்கள். ஒரு ஆளை விட்டு நாளை நோட்டமிடச் சொல்லி இருக்கிறேன். தாசில்தார் அலுவலத்தில் ஏஜென்ட்கள் இருந்தால், அந்த தாசில்தாரை பிடித்து உள்ளே (ஜெயிலில்) போட்டு விடுவேன்.
கோபாலபுரம் வீட்டிற்கு நான் சென்றபோது தலைவர் (ஸ்டாலின்) சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று மிரட்டுவோம். ஓடிப்போய் விடுவார். பிறகு தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி, இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருக்கிறார். நான் ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்.- அமைச்சர் துரைமுருகன்
1962-ல் இருந்து கலைஞருடன் நான் பழகி வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், 1971 வயது வரை அவருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது.
அப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்குள் இருந்தது. அப்பேற்பட்டவர்... என்னை வளர்த்தவர்! அத்தகைய தலைவனின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம்? அதைத்தான் நான் சொன்னேன் கோபாலபுரத்து விசுவாசி என்று! அதை சொல்லுகிற தைரியம் எனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரையில் அப்படித்தான் இருப்பேன்.
பொதுப் பணியில் இருக்கக்கூடிய நாம், அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். கட்-அவுட் வைக்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் காட்பாடியில் மட்டும் கட்-அவுட் வைக்கலாம் என்று சட்டம் இருக்கா? கட்-அவுட் வைக்கும் வேலைகளை நிறுத்துங்கள். மீறி வைத்தால் அந்த விழாவுக்கு நான் வரமாட்டேன். இது உறுதி” என நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.