duraimurugan - eps Puthiya thalaimurai
தமிழ்நாடு

TN Assembly | “கடைந்தெடுத்த சர்வாதிகாரம்” - பேரவையில் நடந்த காரசார விவாதம்!

“ஆளுநரும் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார். ரத்து செய்யவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறப்புக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?” - இபிஎஸ்

ஜெ.நிவேதா

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநடப்பு செய்தன.

வெளிநடப்பு செய்த பின்னர் பல கட்சியினர் மசோதா பற்றிய தங்கள் கட்சியின் கருத்துகளை தெரிவித்தனர். முன்னதாக அதிமுக சார்பில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் வசம் இந்த 10 மசோதாக்கள் மட்டும் நிலுவையில் இல்லை. இன்னும் பல மசோதாக்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் சேர்த்துதான் நீங்கள் (தமிழ்நாடு அரசு) உச்சநீதிமன்றம் சென்றுள்ளீர்கள். எனில் அதன்மீதெல்லாம் தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டியதுதானே? ஆளுநரும் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளாரே தவிர் ரத்து செய்யவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறப்புக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?” என்றார்.

இதற்கு அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், “உங்கள் காலத்தில் உள்ளதும் தொங்குது (நிலுவையில் இருக்கிறதென குறிப்பிட்டு). அதையும் எழுப்பி கூட்டிட்டு வந்திருக்கோம்” என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது

தொடர்ந்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “உச்சநீதிமன்றத்தில் வழக்கு நமக்கு சாதகமாக அமையவேண்டும் என்பதால்தான், முதல்வரால் இன்று கூட்டம் கூட்டப்பட்டுள்ளது” என்றார்.

பின் பேசிய இபிஎஸ், “10 மசோதாக்களுக்கு மட்டும் இன்று பேரவையை கூட்டினீர்களா? இல்லை நிலுவையிலுள்ள எல்லா மசோதாக்களுக்கும் சேர்த்து கூட்டினீர்களா? உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாக்களுக்கு மட்டும்தான் வழக்கு தொடர்ந்தீர்களா, இல்லை நிலுவையிலுள்ள மசோதாக்கள் அனைத்துக்குமே சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளீர்களா?” எனக் கேட்டார்.

உடனடியாக துரைமுருகன் “திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு மட்டுமே இப்போது கூட்டியுள்ளோம். மற்றவையும் அனுப்பப்பட்டால் அப்படியே நடக்கும்” என்றார்.

இந்த பதிலை ஏற்காத இபிஎஸ், மீண்டும் அதேகேள்வியை கேட்கவே உடனே எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நிச்சயமாக, உறுதியாக, மாநில சுயாட்சி கொள்கையோடு நாங்கள் இதை தொடருவோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இதில் எந்த அச்சமும் தேவையில்லை” என்றார். இதனால் பேரவையில் சில நிமிடங்களுக்கு சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் அதே கேள்வி கேட்கவே, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுந்து பதில் கூறினார். அவர் பேசுகையில், “இந்த 12 மசோதாக்கள் மட்டுமன்றி, சமீபத்திய 5 மசோதாக்கள், முன்விடுதலை கோரி அனுப்பப்பட்ட 50 கோரிக்கை மனுக்களும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. அனைத்துக்கும் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தரவேண்டும் என வலியுறுத்தவே உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம்” என்றார்.

இதைக்கேட்ட இபிஎஸ், “தீர்ப்பு வரும் வரை பொறுமைகாக்க வேண்டியதுதானே? ஆளுநரும் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்யவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறப்புக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?” என்றார்.

இதற்கு மீண்டுமொருமுறை சபாநாயகர் அவருக்கு விளக்கம் அளித்தார். மேலும் முதல்வரும், “எதிர்க்கட்சித் தலைவர் கேள்விக்கு மீதமுள்ள சட்டமுன்வடிவு குறித்து ஒரு விளக்கம் தருகிறேன். அடுத்து வரும் வழக்கு விசாரணையின்போது, அரசு அதையும் குறிப்பிட்டு வலியுறுத்தும்” என்றார்.

தொடர்ந்து ‘பல்கலைக்கழங்களில் வேந்தராக ஆளுநர் செயல்படக்கூடாது’ என்ற மசோதாவை மட்டும் குறிப்பிட்டு 1993-ல் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டார் இபிஎஸ். அதில் அவர், இந்த மசோதாவை அதிமுக 1993-லேயே கொண்டு வந்தது என்றும், அப்போது அதை எதிர்த்த திமுக இப்போதுதான் ஆதரிக்கிறது என்றும் கூறினார். ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், எதிர்க்கட்சியாக் இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் திமுக இரட்டைவேடம் போடுகிறது என்றும் சாடினார்.

duraimurugan

இதையடுத்து, திமுக-வின் அப்போதைய நிலைபாடு என்ன என்பதற்கு பின்னுள்ள காரணத்தை அமைச்சர் துரைமுருகன் (அரசியலுக்கு வரும் முன் சென்னை பல்கலை.யில் துணை வேந்தராக இருந்துள்ளார் என்ற முறையில்), எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கினார்.

அவர் கூறுகையில், ‘அன்றைய காலகட்டத்தில் நேரடியாக ஆளுநர் வேந்தராக நியமிக்கப்படமாட்டார்’ என்பதை வலியுறுத்தி, ‘மூன்று பேர் பதவிக்கு போட்டியிடுவர். அரசுடன் கலந்தாலோசிப்பர். அரசே முடிவுசெய்யும்’ என்று கூறி விளக்கினார்.

பேசுகையில், தற்போதுள்ள ஆளுநர் மறைந்த பொதுவுடைமை போராளி சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் கொடுப்பதை இழுத்தடித்த விவகாரத்தை குறிப்பிட்டு ஆளுநரின் செய்கையை, “கடைந்தெடுத்த சர்வாதிகாரம்” என்றார் அமைச்சர் துரைமுருகன்.

இதையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அப்பொழுதெல்லாம் வேந்தர் நியமனமென்பதை அரசின் பரிசீலனைக்கு அதை கொண்டு வந்து, கலந்துபேசிய பின்தான் முடிவெடுக்கப்படும். இப்போது அது நடைமுறையில் இல்லை. அது மீறப்படுகிறது என்பதால் இப்போது இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேரவையில் அடுத்தடுத்த வாதங்களில் காரசார விவாதம் நடந்தது. இறுதியில், “நாங்கள் அன்றே கொண்டுவந்த மசோதாதான் இது என்பதால் ஏற்கிறோம் இதை” எனக்கூறி, குறிப்பிட்ட மசோதாவை ஏற்பதாக தெரிவித்தார் இபிஎஸ்.

இதைக்கேட்ட அமைச்சர் துரைமுருகன், “அடேங்கப்பா, பட்டாரே சென்னா ரெட்டி” என சிரித்தபடி சொல்ல, இபிஎஸ்-ம் சிரித்துக்கொண்டே “வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி திசைதிருப்புவது அவைத்தலைவருக்கு (துரைமுருகன்) கைவந்த கலை என்பதை நாடே அறியும்” என்றார். இதனால் காரசார விவாதம், நகைச்சுவையாக முடிவுக்கு வந்தது.

இருப்பினும் அதிமுக தீர்மானம் குறித்து தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதனால் அமைச்சர் துரைமுருகன் அதிமுக-வை விமர்சித்தார்.